கொல்கத்தா: பிரச்சினைகளை பேசித் தீர்ப்போம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஆளுநர் ஜக்தீப் தன்கர் கடிதம் எழுதி உள்ளார். அவரது திடீர் அழைப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் எலியும் பூனையாக இருந்து வருகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை பிடித்து விடலாம் என கனவு கண்ட பாஜக கண்ணில் மண்ணை தூவிவிட்டு மம்தா கட்சி மீண்டும் வெற்றி பெற்றது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன், கொல்கத்தாவில் வன்முறை வெடித்தது. இதில் ஏராளமான கடைகள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதில் ஏராளமான பாஜகவினர் பாதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து ஆளுநர், மம்தா பானர்ஜியைக் கடுமையாக விமர்சித்து, கடிதம் எழுதியிருந்தார். மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் ஆளுநர் ஜக்தீப் தன்கர் இது தொடர்பாகக் கடிதம் எழுதினார்.
இதையடுத்து ஆளுநரைத் திரும்ப பெறும்படி மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடிக்கு மூன்று முறை கடிதம் எழுதியுள்ளார். அதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஆளுநர் ஜக்தீப் தன்கர் திடீர் கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், நிலுவையில் உள்ள பிரச்சினைகளை பேசித் தீர்க்கலாம் என்றும், இந்த வார இறுதியில் எப்போது வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என மம்தாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
முதல்வரின் தற்போதைய நிலைப்பாடு அரசியலமைப்பை முட்டுக்கட்டைக்கு இட்டுச்செல்லும். ஆரோக்கியமான விவாதம் ஜனநாயகத்திற்கு அத்தியாவசியம் மட்டுமின்றி, அரசியலமைப்பின் பிரிக்க முடியாத அங்கம். பேச்சுவார்த்தை மூலம் அனைத்து விவகாரங்களுக்கும் விரைந்து தீர்வு காண வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் ஆளுநர் ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார்.