சென்னை

ன்று மாலை  6 மணியுடன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதால் அந்தந்த வார்டுகளில் இருந்து வெளியாட்கள் வெளியேற உத்தரவு இடப்பட்டுள்ளது.

வரும் 19 ஆம் தேதி அன்று தமிழகத்திலுள்ள  21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான 12,838 வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், நடக்கிறது.  இதில் 2 கோடியே 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாக்களிக்க உள்ளனர்.

தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் மொத்தம் 74 ஆயிரத்து 416 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. வேட்புமனு பரிசீலனையின்போது பல்வேறு காரணங்களுக்காக 2 ஆயிரத்து 62 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மேலும் 14 ஆயிரத்து 324 வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டனர். தவிர 218 பதவிகளுக்குப் போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அரசியல் கட்சிகளின் தேர்தல் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் ஏனைய பிரச்சாரங்கள் அனைத்தையும் தேர்தல் நடத்தை விதிகளின்படி வாக்குப்பதிவு முடிவடையும் நேரத்தில் இருந்து 48 மணி நேரத்துக்கு முன்பாக முடிக்க வேண்டும்.  எனவே இன்று (பிப்.17) மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிவடைகிறது.

தற்போது பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வெளியாட்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் தங்கி தேர்தல் பணி மற்றும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இன்று மாலை 6 மணிக்குப் பிறகு, தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பில் வாக்காளர் அல்லாத, வெளியிலிருந்து அழைத்து வரப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், கட்சித் தொண்டர்கள் அனைவரும் அந்த பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் வெளியேறாதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.