டெல்லி: வேலூர் சிஎம்சி-யில் நடைபெற்று வரும் முதுநிலை மருத்துவ படிப்பில் 70% இடங்கள் தமிழகஅரசுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ படிப்பில் நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆனால், வேலூரில் செயல்பட்டு வரும் சிஎம்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மருத்துவ படிப்புகளுக்கான இடங்களில் 85% சிறுபான்மைப் பிரிவு மாணவர்களும் மீதமுள்ள 15 இடங்களில் பிற பிரிவு மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவது வழக்கமாக இருந்தது. ஆனால், உச்சநீதிமன்றம், நீட் தேர்வு அடிப்படையில்தான் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. அதையடுத்து கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், 2021-22ம் கல்வியாண்டு முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில், தமிழக அரசு அளித்த கிறிஸ்தவ சிறுபான்மை மாணவர் பட்டியலை ஏற்க மறுத்து வேலுார் சி.எம்.சி., கல்லுாரி நிர்வாகம், உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு விசாரித்து நேற்று தீர்ப்பளித்தது. தீர்ப்பில், சி.எம்.சி., கல்லுாரியில், 2021-22ம் கல்வியாண்டு முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில், 70 சதவீததத்தை, ‘நீட்’ மதிப்பெண் அடிப்படையில் தமிழக அரசு அளிக்கும் கிறிஸ்தவ சிறுபான்மை மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். 30 சதவீத இடங்களை, 2020-21ம் கல்வியாண்டில் பின்பற்றப்பட்ட வழிமுறைப்படி நிரப்ப வேண்டும் என்று உத்தரவிட்டதுடன் இந்த நடைமுறை இந்த கல்வி ஆண்டுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் என்று கூறியுள்ளது.
இதுபோல முதுநிலை மருத்துவப் படிப்பில், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீடு வழங்க, உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது தொடர்பாக விளக்கம் கேட்டு, சிலர் உச்ச நீதிமன்றத்தில் புதிதாக வழக்கு தொடர்ந்து உள்ளனர். இதை விசாரித்த நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், சூர்யகாந்த் அமர்வு, நடப்பு 2022 – 2023ம் ஆண்டுக்கான மருத்துவப் படிப்புகளுக்கான இடஒதுக்கீட்டுக்கான உச்ச வரம்பாக, 8 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டுக்கான உச்ச வரம்பு தொடர்பாக, மார்ச் மாதத்தில் விசாரணை துவங்கும் என ஏற்கனவே அறிவித்து உள்ளோம். ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட விவகாரத்தில் மீண்டும் மீண்டும் புதிய வழக்குகள் தொடர்வதை ஏற்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.