சென்னை: மெட்ராஸ் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி பதவி ஏற்றார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரையை அடுத்து, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சிப் பானர்ஜி, மேகாலாயா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவர் கடந்த ஆண்டு (2021) நவம்பர் 22ந்தேதிமெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்றார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதையடுத்து, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரியை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து பிப்ரவரி 11ந்தேதி குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். அதன்படி, இன்று ஆளுநர் மாளிகை தர்பார் அரங்கில் நடைபெற்ற விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி., சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரியை பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, துணை எதிர்க்கட்சி தலைவர் ஓபிஎஸ் மற்றும் மாநில அரசின் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள முனீஸ்வரன் நாத் பண்டாரியின் பணிக்காலம் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதியுடன் முடிவடைகிறது.