பெங்களூரு

15 ஆம் ஐபிஎல் போட்டிகளில் இடம் பெற நடந்த நேற்றைய முதல் நாள் ஏலத்தில் பல வீரர்களை ஏலத்தில் எடுக்க அணிகள் முன் வரவில்லை.

வரும் மார்ச் மாத இறுதியில் ஐபிஎல் தொடரின் 15வது சீசன் தொடங்க உள்ளது. தற்போது இந்த தொடரில் புதிதாக குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் என 2 அணிகள் இணைந்துள்ளன.   இதையொட்டி மொத்தம் 10 அணிகளுக்கான வீரர்களை தேர்வு செய்வதற்காக மெகா ஏலம் நடத்தப்படுகிறது.

நேற்று பெங்களூருவில் நடந்த முதல் நாள் ஏலத்தில், 590 வீரர்கள் அடங்கிய இறுதிப் பட்டியலில் இருந்து வீரர்களைத் தேர்வு செய்ய கடும் போட்டி நிலவியது. இந்த ஏலத்தில் 370 இந்திய வீரர்கள், 220 வெளிநாட்டு வீரர்களில் இருந்து தங்கள் அணிக்கு தேவையான வீரர்களைத் தேர்வு செய்து ஏலத்தில் எடுக்க, அணி உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள், ஆலோசகர்கள் அடங்கிய குழுவினர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

இதில் நட்சத்திர வீரர்கள் அஷ்வின், போல்ட், வார்னர் உள்பட 48 பேருக்கு அடிப்படை  விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.   அடுத்ததாக ரூ.1.5 கோடி பட்டியலில்  வாஷிங்டன் சுந்தர்,  ஹெட்மயர் உள்பட  20 வீரர்களும், ரூ.1 கோடி பிரிவில் 34 வீரர்களும் இடம் பெற்றிருந்தனர்.  சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்களுக்குக் குறைந்தபட்சம் ரூ.50 லட்சம், ரூ.40 லட்சம், ரூ.20 லட்சமாக அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்த ஏலத்தில் அதிக அனுபவம் இல்லாத, சர்வதேச போட்டியில் அறிமுகமாகாத இளம் வீரர்களை ஏலம் எடுக்க அணிகள் அதிக ஆர்வம் செலுத்தின.  ஆனால் பிரபல வீரர்களான சுரேஷ் ரெய்னா, விரித்திமான் சாஹா, உமேஷ் யாதவ், அமித் மிஷ்ரா (இந்தியா), ஸ்டீவன் ஸ்மித், மேத்யூ வேடு (ஆஸி.), ஷாகிப் அல் ஹசன் (வங்கதேசம்), டேவிட் மில்லர், இம்ரான் தாஹிர், ஆடம் ஸம்பா (ஆஸி.), சாம் பில்லிங்ஸ், அடில் ரஷீத் (இங்கி.) ஆகியோரை வாங்க எந்த அணியும் முன்வரவில்லை.

இன்று ஏலத்தின் 2வது மற்றும் கடைசி நாள் என்பதால் இவர்களை எந்த அணியாவது வாங்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.