சென்னை: நீட் தேர்வு குறித்த நேரடி விவாதத்துக்கு தயாரா என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் விடுத்த சவாலுக்கு, நான் ரெடி என முன்னாள் முதலமைச்சர் இபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதால், நீட் தேர்வு விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. இதன் தாக்கம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் எதிரொலிக்கும் வகையில், அரசியல் கட்சிகள் இதுகுறித்து பேசி மக்களை தங்கள் பக்கம் இழுக்க முயற்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்தில் நீட் தேர்வு அதிமுக ஆட்சியில்தான் வந்தது; தமிழகத்தில் நுழைவுத் தேர்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. நீட் தேர்வு, மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகே அமலுக்கு வந்தது. நீட் தேர்வை தி.மு.க., காங்கிரஸ் கொண்டு வந்ததாக அ.தி.மு.க. தொடர்ந்து பொய் குற்றச்சாட்டு கூறிவருகிறது. நீட் தேர்வை ஜெயலலிதா எதிர்த்தாலும், ஈ.பி.எஸ். ஆட்சிக்கு வந்த பிறகே தமிழகத்தில் அமலுக்கு வந்தது. இதை ஆதாரங்களுடன் நிரூபிக்க தயார், நீட் தேர்வு குறித்து விவாதிக்க தயாரா? என கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு எடப்பாடி பழனிச்சாமி பதில் சவால் விடுத்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்த சவாலை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஏற்று நீட் குறித்து நேரடி விவாதத்துக்கு இடத்தை தேர்வு செய்யுங்கள் நானும், ஓபிஎஸ்-சும் வருகிறோம் என்று கூறியுள்ளார்.
மதுரை மாநகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி தலைவர் பேசும்போது, நீட் தேர்வு குறித்து முதலமைச்சருடன் விவாதிக்க நானும், ஓ.பன்னீர்செல்வமும் தயார். முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிக்கும் பொதுவான ஒரு இடத்தில் விவாதம் செய்ய தயாராக உள்ளோம். நீதிபதியாக இருந்து மக்கள் தீர்மானிக்கட்டும், எனக் கூறினார்.
நீட் விவகாரத்தில் அதிமுக – திமுக இருவரும் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரமாக குற்றம் சாட்டி வரும் நிலையில், தற்போது முதலமைச்சர் ஸ்டாலினின் சவாலை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொண்டிருப்பது தமிழக அரசியல் களத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.