லக்னோ: உ.பி. சட்டமன்ற தேர்தல் முதல்கட்ட வாக்குப்பபதிவு இன்று நடைபெற்று வருகிறது. காலை விறுவிறுப்பாக தொடங்கிய வாக்குப்பதிவு முற்பகல் முதல் குறைவாகவே பதிவாகி வருகிறது.  மாலை 3 மணி வரை 50%க்கும் குறைவான வாக்குப்பதிவு நடந்துள்ளது.

403 தொகுதிகளை கொண்ட  உத்தரபிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி பிப்ரவரி 10, 14, 20, 23, 27, மார்ச் 3, 7 ஆகிய தேதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதையடுத்து, இன்று முதல்கட்ட தேர்தல்  ஷாம்லி, ஹாபூர், கவுதம் புத்தூர் நகர், முசாபர் நகர், மீரட், காஜியாபாத், புலந்த் சாஹர், அஸிகர், மதுரா, ஆக்ரா, ஆகிய 11 மாவட்டங்களைச் சேர்ந்த  58 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையிலேயே ஏராளமானோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்து, வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை செய்தனர். காலை 9 மணி நிலவரப்படி முதல் இரண்டு மணி நேரத்தில் 8 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

பின்னர் முற்பகல் 11 மணி நிலவரப்படி 20.03 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.  அதையடுத்து வாக்குப்பதிவுகள் சற்று குறையத்தொடங்கியது. 1 மணி நிலவரப்படி 35.03 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

மாலை 3 மணி வரை 50%க்கும் குறைவான வாக்குப்பதிவு நடந்துள்ளது. அதாவது 48.24% வாக்குகளே பதிவாகி உள்ளன.

வாக்குப்பதிவு குறைவாக இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை சமாஜ்வாதி கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக செயல்படவில்லை என்றும், பல மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப் பட்டதாகவும், மக்கள் வாக்களிக்க காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகின. சுமூகமான வாக்குப்பதிவை உறுதி செய்ய, நியாயமான தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.