சென்னை: மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் மூத்த மகன் மு.க முத்து, உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் நலம் விசாரித்தார்.
கருணாநிதியில் மூத்த மகன் மு.க.முத்து. மு.கருணாநிதியின் மூத்த மனைவியும் சிதம்பரம் ஜெயராமன் சகோதரியு மான பத்மாவதி இவரின் தாயார் ஆவார். தந்தையின் கலையுலக வாரிசாக திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். எம்ஜிஆருக்கு எதிராக திரையுலகில் களமிறங்கிய மு.க.முத்து, பிள்ளையோ பிள்ளை, போக்கிரி உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். தீவிர அரசியலில் இடம் பெற விரும்பாத நிலையில், இடையில் தந்தையிடம் ஏற்பட்ட பிணக்கு காரணமாக, தனித்து வசித்து வந்தார்.
கடந்த 2017ம் ஆண்டு தனது வறுமையைக்கூறி அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து கோரிக்கை விடுத்தார். அவருக்கு முதல்வர் ஜெயலலிதா அதிமுக நல நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் நிதியளித்து உதவினார். இது தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
பல காலமாக தனித்து வசித்து வரும் மு.க.முத்து, சில காலமாக முத்து எங்கே இருக்கிறார் என்பது தெரியாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் முத்துவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும், மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.