காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வார்டு பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில், தேர்தல் களம் அனல் பறக்கிறது. இந்த நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சியில் 36வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் ஜானகிராமன். இவரை ஆதரித்து நேற்றுதான் முதன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் மேற்கொண்ட நிலையில், இன்று அவர் திடீரென தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே இவர் வேட்பு மனு தாக்கல் செய்து, வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை அவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஜானகிராமன் தற்கொலைக்கு காரணமான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி, அதிமுகவினர் விஷ்ணு காஞ்சி காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சியினர் மிரட்டல் காரணமாகவே ஜானகிராமன் தற்கொலை செய்து கொண்டதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.