பெங்களூரு: கர்நாடக அரசின் ஒரே சீருடை திட்டத்துக்கு இடைக்கால தடைவிதிக்க முடியாது என உத்தரவிட்ட கர்நாடக உயர்நீதிமன்றம்,  பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப் அணிவது தொடர்பான பிரச்சனையை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் அமர்வு விசாரிக்கும் என கூறியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் அனைத்து மாணவர்களிடையே சமத்துவதை கொண்டு வரும் வகையில், ஒரே சீருடை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஹிஜாப் அணித்து வந்த இஸ்லாமிய மாணவிகளை கல்லூரி நிர்வாகம் அனுமதிக்க மறுத்தது. இது சர்ச்சையானது. இதை அந்த மாணவிகள் பெரிது படுத்தியதால் சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து முஸ்லிம் மாணவிகளுக்கு எதிராக இந்து மாணாக்கர்களும் போராட்டத்தில் குதித்ததால், அங்கு பதற்றம் நிலவியது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகள் 3 நாட்கள் மூட அரசு உத்தரவிட்டது.

இதுதொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நேற்றைய விசாரணையின்போது, மாணாக்கர்கள் அமைதி காக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதையடுத்த இன்று பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை   தனி நீதிபதி கிருஷ்ணா தீட்சித் விசாரித்தார்.

அப்போது மாணவிகள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் தேவாதத் கம்மாத், ஹிஜாப் விவகாரம் மோசமான நிலையை அடைந்ததற்கு காரணம் மாநில அரசின் மோசமான நிலைப்பாடுதான். மாநில அரசு ஹிஜாப் அணிவதற்குத் தடை விதிக்கவில்லை. இது தொடர்பாக இன்னும் முடிவெடுக்கவில்லை என்று அறிவித்துள்ளது. இதனால் இந்த வழக்கை கூடுதல் அமர்வுக்கு மாற்ற வேண்டும் அல்லது மாணவிகளை அவர்களது நம்பிக்கையின்படி கல்வி நிலையங்களுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

ஆனால், அரசு வழக்கறிஞர்கள், கல்வி நிலையங்களில் மத வேறுபாடுகளை காட்டுவதை தவிர்க்க மாணவர்கள் பாரபட்சமின்றி சீருடையில்தான் வர வேண்டும் வலியுறுத்தினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தற்போதைய நிலையில் ஒரே சீருடை அறிவிப்புக்கு தடை விதிக்க முடியாது என்று அறிவித்ததுடன், ஹிஜாப் விவகாரம் தொடர்பான அனைத்து வழக்குகளையும், கூடுதல் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.