மும்பையின் மைய பகுதியான தாராவியில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தூய்மை வளாகத்தை மகாராஷ்டிரா மாநில சுற்றுலா துறை அமைச்சரும் சிவசேனா இளைஞர் அணி தலைவருமான ஆதித்ய தாக்கரே இன்று திறந்துவைத்தார்.

2 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட தாராவி பகுதி உலகளவில் மக்கள் வாழும் பகுதியாக உள்ளது, இங்கு சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் வாழ்கின்றனர்.

சுகாதார சீர்கேடு மிகுந்த இந்த பகுதியை சீரமைக்க பல்வேறு முயற்சிகள் மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

தற்போது உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா அரசு இந்த பகுதியில் சவிதா கேந்த்ரா என்ற பெயரில் 111 கழிப்பறைகள் மற்றும் குளியல் அறைகளுடன் கூடிய ஒரு வளாகத்தை அமைத்துள்ளது.

இந்தியாவிலியே மிகப்பெரிய ஒருங்கிணைந்த சமூக தூய்மை வளாகமாக அமைந்துள்ள இந்த வளாகத்தில் தாராவி பகுதி மக்களுக்குத் தேவையான சுத்தீகரிக்கப் பட்ட குடிநீர் மற்றும் சலவை நிலையம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் வீணாக வெளியேறும் தண்ணீரை சுத்தீகரித்து சலவை மற்றும் கழிப்பறையை சுத்தம் செய்ய பயன்படும் வகையில் நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதோடு இந்த வளாகம் முழுவதும் சூரிய சக்தியில் இயங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

தாராவி பகுதியில் கடந்த 2 ஆண்டுகளில் 50,000 பேர் வரை பயன்படுத்தக் கூடிய வகையில் 800 கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது.