சென்னை: அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையை சிறப்பு புலனாய்வுகுழு விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
.
திமுக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு, கொடுரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை தமிழ்நாடு சிபிசிஐடி காவல்துறை விசாரணை நடத்திய நிலையில் யாரையும் கைது செய்ய முடியாமல் திணறி வந்தது. இதையடுத்து, வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது மனைவி லதா உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அதையடுத்து இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் 7ந்தேதி உயர்நீதிமன்ற நீதிபதி பஷீர்அகமது உத்தரவிட்டார். 3 மாதத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிஐக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து வழக்கை கையில் எடுத்த சிபிஐ விசாரணை நடத்தியது.
ராமஜெயம் கொலை நடந்த பகுதி மற்றும், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, ராமஜெயத்தின் மனைவி உள்பட பலரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், கொலை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக இந்த வழக்கில் ஒருவரையும் சிபிஐ-ல் கைது செய்ய முடியவில்லை.
இந்த நிலையில் ராமஜெயம் வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதுகுறித்து கூறிய நீதிபதி, விசாரணை கோணத்தில் சென்றுகொண்டிருப்பதாகத் கூறினார்.
ஆனால் அதை ஏற்க மறுத்த மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, `சி.பி.ஐ விசாரணை அதிகாரிகளோடு சேர்ந்து சிறப்புப் புலனாய்வுக்குழு விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார்.‘
இதையடுத்து வழக்கில் ஆஜரான தமிழக அரசுத் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன்முகமது ஜின்னா, இந்த வழக்கில், தமிழக காவல்துறை விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு வழங்கத் தயார். விசாரணைக்கு உதவ காவல்துறை அதிகாரிகள் பட்டியலை வழங்குகிறோம்” என்று பதிலளித்திருக்கிறார்.
இதையடுத்து நீதிபதி, அதிகாரிகள் பட்டியல்களைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு வழக்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து, ராமஜெயத்தின் கொலை வழக்கை சிறப்பு புலனாய்வுகுழு விசாரிக்க நீதிமன்ற உத்தரவிட்டது.
சிபிஐயால் கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியாததால், சிறப்பு புலனாய்வுகுழு விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.