அகமதாபாத்: அகமதாபாத் குண்டு வெடிப்பு வழக்கை விசாரித்து வந்த சிறப்பு நீதிமன்றம், இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி இந்த வழக்கில் 49 பேர் குற்றவாளிகள் என்றும் 28 பேர் மீதான குற்றச்சாட்டு உறுதியாகாததால், அவர்களை விடுதலை செய்வதாகவும் தீர்ப்பளித்துள்ளது.

குஜராத் தலைநகர் அகமதாபாத் நகரில் கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 26-ந்தேதி  தொடர் குண்டு வெடிப்பு நடைபெற்றது. சுமார் 1 மணி நேரத்திற்குள் 21 இடங்களில் வெடித்த குண்டுவெடிப்பில், 51 பேர் பலியானார்கள். 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்பானது, கடந்த  கடந்த 2002-ம் ஆண்டு நடந்த ரெயில் எரிப்பு சம்பவத்துக்கு பழிவாங்கும் நோக்கில் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக காவல்துறையினர் 35 வழக்குகளை பதிவு செய்ததுடன்,  இந்திய முஜாஹிதீன் அமைப்புடன் தொடர்புடைய 82 பேரையும் கைது செய்தனர்.

இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக  விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இந்த நீதிமன்றத்தில்  ஒருவர் மட்டுமே  குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும்  4 பேர் இதுவரை கண்டுபிடிக்க முடியாத நிலையில், அவர்கள் மீதான விசாரணை நடைபெறவில்லை. இதன் காரணமாக மீதமுள்ள . 77 பேருக்கு எதிராக வழக்கு விசாரணை நடைபெற்று தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கில், அகமதாபாத் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.பட்டேல் பரபரப்பு  தீர்ப்பு வழங்கினார். அதில், 49 பேர் குற்றவாளிகள் என்றும், 28 பேர்மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்படவில்லை என்பதால், அவர்களை விடுதலை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.