டெல்லி: காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பிரபல கார் நிறுவனமான ஹுண்டாய் நிறுவன டீலர் கருத்து தெரிவித்த நிலையில், டிவிட்டரில் #BoycottHyundai டிரெண்டிங்கானது. இதையடுத்து, ஹூண்டாய் இந்தியா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
காஷ்மீர் விகாரம் தொடர்பாக ஹூண்டாய் டீலர் ஒருவர் பாகிஸ்தான் நாட்டிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். அதாவது, ஒவ்வொரு ஆண்டும் பிரிவினைவாதத்திற்கு ஆதரவாகக் காஷ்மீரில் (Kashmir) பிப்ரவரி 5ஆம் தேதி காஷ்மீர் ஒற்றுமை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி பாகிஸ்தான் டீலர் டிவிட்டர் பக்கத்தில், காஷ்மீர் தற்போது சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அதற்கு ஆதரவாக இருப்போம் என்றும் பதிவிட்டிருந்தனர்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதை கண்டித்து, #Boycott Hyundai என்ற ஹேஷ்டேக்கும் இந்தியாவில் டிரெண்டிங்கானது இதையடுத்து, ஹூண்டாய் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து ஹூண்டாய் நிறுவனம், தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “ ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் , கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய சந்தையில் உண்மையாக இருக்கிறது. இந்திய தேசியவாத கொள்கையை மதிப்பதில் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம். ஹூண்டாய் பிராண்டுக்கு இந்தியா இரண்டாவது வீடு என்றே சொல்வோம். உணர்வுகளை மதிக்காத சில கருத்து எங்கள் பெயரில் பகிரப்பட் டிருக்கலாம். ஆனால் நாங்கள் எப்போதும் இதுபோன்ற விஷயங்களில் பொறுத்துக்கொள்ள மாட்டோம்.
ஹூண்டாய் பாகிஸ்தான் டிவிட்டர் பக்கத்தில் வெளியான கருத்தினை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். எங்களின் கொள்கைக்கு ஏற்ப நாங்கள் இந்தியாவின், இந்திய மக்களின் வளர்ச்சியில் உறுதுணையாக இருப்போம்” என தெரிவித்துள்ளது.