ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் முச்சிந்தலாவில் அமைக்கப்பட்டுள்ள  216 அடி உயர ராமானுஜர் சிலையை பிரதமர் மோடி இன்று மாலை திறந்து வைத்தார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாதின் புறநகர் பகுதியான ஷம்ஷாபாதில் ரூ.1,000 கோடி செலவில் பஞ்சலோகத்திலான பிரமாண்டமான ராமானுஜர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஜீயர் அறக்கட்டளையால் ஐதராபாத்தில் உள்ள சம்ஷாபாத்தில் உள்ள ஸ்ரீராம் நகரில் உள்ள ஜீவா ஆஸ்ரமத்திற்கு அருகில் ராமாநுஜரின் 1,000-வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் இந்த சிலை உருவாக்கப்பட்டு உள்ளது.

45 ஏக்கர் பரப்பளவில் இந்த சிலை அமைக்கும் பணிக்கா அடிக்கல்  கடந்த 2014-ஆம் ஆண்டே நாட்டப்பட்டது. சுமார் 8 ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வந்த நிலையில், பணிகள் முழுமையான முடிவடைந்துள்ளதால், இன்று (பிப்ரவரி 5ந்தேதி)   பிரதமர் நரேந்திர மோடி சிலையை  திறந்து வைத்தார்.

ராமாநுஜர் சிற்பம் மேல் கோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் கோயில்களில் உள்ள ராமாநுஜரின் செதுக்கப்பட்ட கல் உருவங்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளது. வெளிப்புறச் சிலை, 216 உயரத்தில், ராமாநுஜர் இந்தப் பூமியில் 120 வருடங்கள் வாழ்ந்ததை நினைவுகூரும் வகையில் 120 கிலோ தங்கத்தைக் கொண்டு சிலையின் கருவறை அமைக்கப்பட்டுள்ளது.  இந்த சிலையானது உட்கார்ந்த நிலையில் உள்ள உயரமான சிலைகளில் ஒன்றாக உள்ளது.

‘சமத்துவத்துக்கான சிலை’ என  பெயரிடப்பட்டுள்ள  இச்சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

முன்னதாக, இதற்கான பூஜைகள், நிகழ்ச்சிகள்  பிப்ரவரி 2-ஆம் நாள் தொடங்கப்பட்டது. இந்த சிலை அமைந்துள்ள பகுதியில் உள்ள  கருவறை தங்கத்தால் அமைக்கப்பட்டுள்ளது.  கருவறை அமைந்துள்ள உள் அறையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிப்ரவரி 13-ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளார்.

216 அடி  ராமானுஜர் சிலை உலகின் 2வது உயர சிலை என்ற பெருமையை பெற்றுள்ளது. ஏற்கனவே ல் தாய்லாந்தில் அமைந்துள்ள 302 அடி உயரம் கொண்ட புத்தர் சிலையே உலகின் மிகப்பெரிய சிலையாக இருந்து வருகிறது என்பது  குறிப்பிடத்தக்கது.

ஆந்திராவில் அமைக்கப்பட்டுள்ள 216 அடி உயர ராமானுஜர் சிலை! பிப்ரவரி 5ந்தேதி பிரதமர் திறந்து வைக்கிறார்…