சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் வந்தது. இதையடுத்து அங்கு சோதனை நடத்திய போலீசார், அது புரளி என்று தெரிவித்துள்ளனர்.
இன்று முற்பகல் முதலமைச்சர் உதவிக்கான கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மர்ம போன் ஒன்று, முதல்வர் ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், சிறிது நேரத்தில் வெடிக்கும் என மிரட்டல் விடுத்து தொடர்பைத் துண்டித்துள்ளார்.
இதையடுத்து உஷாரான காவல்துறையினர், போன் செய்த நம்பரை வைத்து அவரை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டதுடன், மற்றொருபுறம், வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று, ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வெடிகுண்டு தொடர்பான எந்த பொருளும் சிக்கவில்லை. இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரியவந்தது.
இதற்கிடையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த செல்போன் எண் குறித்து சைபர் கிரைம் விசாரணையில், அந்த போன் எண், திருக்கோவிலூரைச் சேர்ந்த நபர் எனத் தெரியவந்தது. இந்த நபரை காவல் துறையினர் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.