டெல்லி: நீட் மாசோதாவை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் அவருக்கு எதிராக தமிழக எம்.பிகள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து விவாதிக்க வலியுறுத்தி ஒத்தி வைப்பு நோட்டீசும் வழங்கியுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். பிப்ரவரி 1ந்தேதி சட்டப்பேரவை சபாநாயகருக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களை இந்த மாசோதா பாதிக்கும் என்று ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது. நீட் ரத்து மசோதாவை சட்டப்பேரவையில் மறுஆய்வு செய்ய ஆளுநர் மாளிகை அறிவுறுத்தி உள்ளதாக நேற்று தகவல் வெளியான நிலையில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த மக்களவை தமிழக எம்.பி.க்கள் ஆளுநர் ஆர்.ரவிக்கு எதிராக மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர்.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, நீட் மசோதாவை திரும்ப பெற கோரி தமிழக எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பினர். தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என அவையின் மையப்பகுதிக்கு சென்று முழக்கமிட்டனர். நீட் விலக்கு மசோதாவை 2-வது திருப்பி அனுப்ப ஆளுநருக்கு அதிகாரமில்லை . 5 மாதங்களாக மசோதாவை கிடப்பில் போட்டு வைத்துவிட்டு தற்போது திருப்பி அனுப்பியது எந்த வகையில் நியாயம் என்று மக்களவையில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு ஆவேசமாக கேள்வி எழுப்பினார். இதையடுத்து, நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தமிழக எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதற்கிடையே நீட் விலக்கு மசோதா குறித்து விவாதம் நடத்தக்கோரி மாநிலங்களவையில், திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளது. மாநிலங்களவை செயலரிடம் திமுக எம்.பி.யான திருச்சி சிவா இந்த ஒத்திவைப்பு நோட்டீஸை வாங்கியுள்ளார். அந்த மனுவில் மாநிலங்களவை அலுவல் நடவடிக்கைகளை ஒத்தி வைத்துவிட்டு விவாதிக்க வேண்டும் என திருச்சி சிவா குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே தமிழக அரசின் நீட் தேர்வுக்கு விலக்குகோரும் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியிருக்கும் நிலையில், தமிழக அரசு நாளை அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.