சென்னை: விரைவிலேயே அதிமுக நம் கைக்கு வரும் என்றும்  ஜெயலலிதாவின் ஆசையை உறுதியாக கொண்டுவருவோம் என சசிகலா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் நினைவுநாளையொட்டி, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அண்ணா படத்திற்கு சசிகலா  மலர் தூவி மரியாதை செலுத்தினார். சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்‍கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து அங்கு கட்சியினரிடம் பேசியவர்,   “அண்ணாவின் இதயக்கனியாக எம்ஜிஆர் இருந்தார். அவர் அதிமுக என்ற இயக்கத்தை தொடங்கினார். நாங்களும் அண்ணாவை வணங்குகிறோம். எம்ஜிஆர் மற்றும் அண்ணாவின் தொண்டர்கள் இந்தத் தேர்தலில் மக்களின் ஆதரவுடன் வெற்றி பெறுவார் என்றார்.

மேலும், அதிமுக விரைவில் நமது கைக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்தவர், எந்தக் கட்சியாக இருந்தாலும், கட்சியை தற்போது மக்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள். தொண்டர்கள் பொதுமக்கள் எல்லோரையும் நினைத்து செயல்பட வேண்டும். எதையும் எடுத்தோம், கவுத்தோம் என்று செயல்படக்கூடாது அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்றார்.

பின்னர் செய்தியாளர்கள் தொண்டர்களை சந்திக்கவில்லை ஏன் என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சசிகலா, உள்ளாட்சித் தேர்தல் மற்றும்கொகரோனா தொற்று அதிகமாக இருக்கிற காரணத்தினால் தற்போது சந்திக்க இயலவில்லை. மிக விரைவில் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் சென்று மக்களை சந்திப்பேன் என்றார்.

திமுக ஆட்சி குறித்த கேள்விக்கு,  கடந்த 8 மாத காலத்தில் திமுக ஆட்சியைப் பற்றி மக்கள் புரிந்து இருப்பார்கள்  யார் இருந்தால் நன்றாக இருக்கும் என மக்கள் புரிந்து கொண்டார்கள்” எனக் கூறினார்.

அண்ணா பிறந்தநாளையொட்டி சசிகலா விடுத்துள்ள அறிக்கையில், தென்னாட்டு பெர்னாட்ஷா என்று நம் அனைவராலும் அன்போடு அறியப்பட்ட பேரறிஞர் அண்ணாவின் 53-ஆம் ஆண்டு நினைவுநாளில் அவர்தம் நினைவைப் போற்றுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

“போட்டியும், பொறாமையும், பொய் சிரிப்பும் நிறைந்த இந்த உலகத்தில், நமது பாதையில் நாம் நேராக நடந்து செல்ல நமக்கு துணையாக இருக்கக்‍கூடியது கல்வி மட்டுமே” என்று போதித்த நம் பேரறிஞர் அண்ணா, பல்வேறு முற்போக்கு கருத்துக்களையும், சீர்திருத்தக் கருத்துக்களையும் நாடகங்களில் எழுதியும், நடித்தும் மக்களிடம் கொண்டு சேர்த்தார் – மேலும், “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற கோட்பாட்டை தன் இறுதிமூச்சுவரை கடைபிடித்தார் என சின்னம்மா தெரிவித்துள்ளார்.

நம் புரட்சித்தலைவர், பேரறிஞர் அண்ணாவின் சிறந்த அறிவாற்றல், பேச்சாற்றல் மற்றும் சீர்திருத்த கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அவருடைய வெற்றிக்காக கடினமாக உழைத்து, பேரறிஞர் அண்ணா முதல்வராக அரியணை ஏற புரட்சித்தலைவர் முக்கிய காரணமாக விளங்கினார் -அதேபோன்று, நம் புரட்சித்தலைவி அம்மாவும், பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளைப் பின்பற்றி “மக்களால் நான் மக்களுக்காகவே நான்” என்று தனது இறுதிமூச்சுவரை தமிழக மக்களின் நல்வாழ்வுக்காக தன்வாழ்வை அர்ப்பணித்ததாக சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

பேரறிஞர் அண்ணா கடைபிடித்த “மக்கள் தொண்டே மகேசன் தொண்டு” என்ற தாரக மந்திரத்தை மனதில் வைத்து, நாம் அனைவரும் ஒன்றிணைந்து, மக்கள் பணியை ஆற்றிடுவோம் – மேலும், “நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்” என்ற பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிக்கேற்ப, அவரது பாதையில் தொடர்ந்து பயணிப்போம், வென்று காட்டுவோம் என தெரிவித்துள்ளார்.

மீண்டும் சிறைவாசம்? பெங்களூரு சிறை சொகுசு வாழ்க்கையில் சசிகலாமீதான குற்றச்சாட்டு உறுதி…