சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கட்சிகள் சார்பில்  திருநங்கைகளை வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டு உள்ளனர். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேலூர் மாநகராட்சியில்  ஆளும் திமுக சார்பில் திருநங்கை ஒருவர் களமிறக்கப்பட்டு உள்ள நிலையில், சென்னை மாநகராட்சியில் அதிமுக சார்பில் ஒரு திருநங்கை களமிறக்கப்பட்டு உள்ளது. இதுமட்டுமின்றி, பாஜக சார்பிலும் சென்னையில் திருநங்கை ஒருவர் களமிறக்கப்பட்டு உள்ளார்.

திமுக தரப்பில்  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேலூரில் 49வது வார்டில் திருநங்கை கங்கா நாயக் என்பதை அறிவித்து உள்ளார். இவர் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக உறுப்பினராக இருந்து வருகிறார். சமூக ஆர்வலரான இவர் தென்னிந்திய திருநங்கைகள் சங்கத்தின் செயலாளராக இருக்கிறார். “பொதுமக்களின் ஆதரவு எனக்கு இருப்பதால் தேர்தலில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. பொதுமக்களே எனக்கு தேர்தலில் போட்டியிடும் நம்பிக்கையை அளித்தனர்” என்று கூறி வாக்கு வேட்டையாடி வருகிறார்.

அதிமுக சார்பில் தென் சென்னை (வடக்கு) மாவட்ட மகளிரணி துணைச் செயலாளராக உள்ள திருநங்கை ஜெயதேவி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் தேனாம்பேட்டை 112வது வார்டில் போட்டியிடுகிறார். ஜெயதேவியின் குடும்பத்தினர் அதிமுகவைச் சேர்ந்தவர்கள். இவர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் உறுப்பினராக இருந்து வருகிறார்.

பாஜக சார்பில் ராஜா என்கிற ரதி  என்ற திருநங்கை சென்னை திரு.வி.க நகரில் 76வது வார்டில் கவுன்சிலராக போட்டியிடுகிறார். இவர் பா.ஜனதா கட்சியில் வடசென்னை மாவட்ட கலை கலாச்சார பிரிவு துணைத் தலைவராக உள்ளார். ஓட்டேரி பிரிக்ளின் சாலையில் அவர் வசித்து வருகிறார். ரதி ஏற்கனவே கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி இருக்கிறார்.

தமிழ்நாட்டில், ஆளும் திமுகவும் எதிர்க்கட்சியான அதிமுகவும் மத்தியில் ஆளும் பாஜகவும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திருநங்கைகளை களமிறக்கியிருப்பது வரவேற்பை பெற்றுள்ளது.

திருநங்கைகள் களத்தில் இறக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே வியப்பை ஏற்படுத்தி இருந்தாலும், அவர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்பட்டு வருவது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஏற்கனவே மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆட்சியின்போதுதான், மூன்றாம் பாலினத்தவரை திருநம்பி, திருநங்கை என அழைக்க அரசாணை வெளியிடப்பட்டது. அத்துடன் அவர்களும் சமுகத்தில் அனைத்து வசதிகளும் பெற்று சாதாரண மக்களைப்போல வாழ வகை ஏற்படுத்தியதுடன், ஓட்டுரிமை, குடும்ப அட்டை போன்றவை வழங்கப்பட்டது. . இது அவர்களின் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.