சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலால் மூடப்பட்ட கல்வி நிலையங்கள், இன்றுமுதல் முழுமையாக நேரடி வகுப்புகள் நடைபெறும் என அரசு அறிவித்துள்ள நிலையில், சென்னை உள்பட பல பகுதிகளில் மாணாக்கர்கள் ஆர்வமுடன் பள்ளிகளுக்கு வருகை தந்தனர். ஆனால், சென்னையில் பல பள்ளிகளில் போதிய இடவசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் மாணவர்களை சமுக இடைவெளியுடன் அமர வைப்பதில் சிக்கல்களை எதிர்கொண்டு உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையால் தொற்று பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து பொங்கல் பண்டிகை முன்பாகவே பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன 40 நாட்களுக்கு பிறகு நாளை (பிப்ரவரி 1ந்தேதி) மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து பள்ளிகளில் முன்னெச்சரிக்கை மற்றும் தூய்மை பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டதுடன், பள்ளிகள் திறக்கப்பட்டாலும், மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை எனவும் நேரடி அல்லது ஆன்லைன் முறையிலேயே வகுப்புகள் நடத்துவது குறித்து அந்தந்த பள்ளிகளே முடிவு செய்துகொள்ளலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
ஆனால், மாணாக்கர்களை பள்ளிகளுக்கு அனுப்புவதிலேயே, பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. ஆன்லைன் வகுப்புமூலம் சந்தேகங்கள் ஏதும் பெற முடிய வில்லை என்றும், அதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறும் பெற்றோர்கள் இன்று நேரடி வகுப்பு என்றதும் தங்களது குழந்தைகளை பள்ளிகளுக்கு அழைத்து வந்தனர். இதனால் சென்னையின் பல அரசு பள்ளிகளில் மாணாக்கர்கள் கூட்டம் அலைமோதியது.
ஆனால், தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, மாணாக்கர்களுக்கு வெப்பநிலை சோதனைகள், முகக்கவசம் அணிவதுடன், உடல் இடைவெளி விதிமுறைகளை அமல்படுத்த ஆசிரியர்கள் முயற்சித்து வருகின்றன. ஆனால், கடந்தஆண்டு கொரோனா காரணமாக, தனியார் பள்ளிகளில் கேட்கப்படும் கல்விக்கட்டணத்தை கட்ட முடியாத நிலை மற்றும் அரசு அறிவித்துள்ள பல்வேறு சலுகைகள் காரணமாக, ஏராளமான பெற்றோர் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளியில் இருந்து விலக்கி, அரசு பள்ளிகளில் சேர்த்தனர்.
இதன் காரணமாக ஒவ்வொரு அரசு பள்ளியிலும் இரு மடங்கு மாணாக்கர்கள் சேர்ந்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்க வகுப்பறைகளோ, போதிய அளவிலான ஆசிரியர்களோ இல்லாத நிலையே நீடித்து வருகிறது. ஆனால், இதை அரசு கண்டுகொள்ளாமல், இன்று முதல் முழுமையாக நேரடி வகுப்புகள் நடைபெறும் என அறிவித்து விட்டதால், பள்ளிகளில் மாணாக்கர்கள் கூட்டம் அலைமோதியது.
இதனால் மாணவர்களை சமூக இடைவெளியுடன் அமரவைப்பதில் சென்னையில் உள்ள பல மாநகராட்சி நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகள் தடுமாறின. குறிப்பாக வடசென்னையின் பல பள்ளிகளில் இதுபோன்ற காட்சகிள் காணப்பட்டன. மாணவர்களை அமர வைக்க போதிய வகுப்பறைகள் இல்லாத நிலையில், மாணவர்களை பள்ளியின் வராண்டாவில் அமர வைத்துள்ளனர். இதைக்கண்ட பெற்றோர்கள் பலர் ஆசிரியர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.