சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி, மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையிலான குழுவினர், காங்கிரஸ் கட்சி  போட்டியிடும் வார்டுகள் தொடர்பாக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் விரும்பும் இடங்களை திமுக பரிசீலித்து வருகிறது என்று கூறினார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. 22ந்ததி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து,  அரசியல் கட்சிகள் சுறுசுறுப்படைந்துள்ளன. கூட்டணி பேச்சுவார்த்தை, இடப்பங்கீடு குறித்து  தீவிரம் காட்டி வருகின்றன.

இந்த திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள், திமுக தலைமையிடம் பேசி வருகிறது. அதன்று இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி சட்டமன்ற காங்கிரஸ் தலைவரும், பொதுக்கணக்குக்குழு தலைவருமான கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ உள்பட  குழுவினர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது  இடப்பங்கீடு குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி,  தமிழ்நாட்டின் உரிமைகளை ஒன்றிய அரசிடம் கேட்டு பெற வேண்டும் என்று முதல்வரிடம் வலியுறுத்தியதாக கூறியவர்,  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 2 தினங்களில் மாவட்ட அளவிலான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றார்.

இந்த தேர்தலில், காங்கிரஸ் எத்தனை இடங்களில் போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள இடங்களில் வார்டுகளை கேட்டிருக்கிறோம். அதை  திமுக பரிசீலிப்பதாக கூறியிருக்கிறது என்றார்.

மேலும், மாவட்ட அளவில்  பேச்சுவார்த்தைக்கு செல்லும் மாவட்ட தலைவர்கள், திமுக மாவட்ட கழக செயலாளர்களோடு ஒத்துழைத்து, நாங்கள் அறிவித்திருக்கிற குழுக்களின் கருத்தைக் கேட்டு, வெற்றி வாய்ப்புள்ள இடங்களில், தொகுதிகளைக் கேட்டுப் பெற வேண்டும் என அறிவுறுத்தி இருப்பதாகவும், பல மாவட்டங்களில் பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்திருக்கிறது. சில மாவட்டங்களில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றார்.

இதுமட்டுமின்றி, கூட்டணி கட்சிகளான இடதுசாரிகள், விசிக, மதிமுக, கொமதேக என பல கட்சிகளுடன் அதிமுக  பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருக்கிறது என்றவர் தற்போதுவரை  எல்லாம் மகிழ்ச்சியாகவே சென்று கொண்டிருக்கிறது” என்றார்.