கோவை: திருப்பூர் பகுதியில் 6 பேரை தாக்கிய நிலையில், மயக்க ஊசி போடப்பட்டு பிடிக்கப்பட்ட சிறுத்தை வால்பாறை காட்டில் விடப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக போக்கு காட்டி வந்த சிறுத்தை நேற்று சிக்கியது. அவிநாசி அடுத்த பாப்பான்குளம் பகுதியில், கடந்த 24ம் தேதி சோளத்தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை, வன ஊழியர் உட்பட 6 பேரை தாக்கியது. இதில் 2 பேருக்கு ரத்தக்காயம் ஏற்படுட சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிறுத்தை பெருமாநல்லுார் அருகே நியூ திருப்பூர் பகுதியில், தேசிய நெடுஞ்சாலையை சிறுத்தை கடந்து சென்றதாக அவ்வழியாக காரில் சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் சென்சார் காமிராக்கள் பொருத்தி கண்காணித்து வந்தனர்.
அதைத்தொடர்ந்து அம்மாபாளையம் பகுதியில் முட்புதரில் பதுங்கியிருந்த சிறுத்தையை கண்டறிந்து அதற்கு துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தினர். பின்னர் முட்புதரை சுற்றிவளைத்த வனத்துறையினர், மயக்க நிலையில் இருந்த சிறுத்தையை வலை மூலம் பிடித்தனர்.
பின்னர் அந்த சிறுத்தைக்கு மருத்துவ சோதனை நடத்தப்பட்டது. அதில், பிடிபட்டது ஆண் சிறுத்தை என்பதும், அதற்கு 4 வயது இருக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், ஆரோக்கியமாக இருப்பதாகவும் கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த சிறுத்தை, கோவை மாவட்டம் வால்பாறை அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட காடம்பாறையில் வனத்துறையினர் விடுவித்தனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.