டெல்லி: கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக, தமிழ்நாடு உள்பட தென் மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இன்று ஆலோசனை நடத்துகிறார். ஏற்கனவே 9 வட மாநிலங்களை சேர்ந்த அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்திய நிலையில் இன்று தென்மாநில அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
நாடு முழுவதும் கரோனா மூன்றாம் அலை உச்சம் அடைந்துள்ளது. இருந்தாலும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்பதால், பொதுமக்களும், மத்திய, மாநில அரசுகளும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளன. இதையடுத்து, ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு, கல்வி நிலையங்களும் திறக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கேரளம், தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், தெலங்கானா, லட்சத் தீவுகள், புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளை சேர்ந்த சுகாதாரம் அல்லது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்துகிறார். இன்று பிற்பகல் 2 மணிக்கு காணொலி மூலம் நடைபெறும் கூட்டத்தில், கரோனா நிலவரம், தடுப்பூசி பணிகளை விரைவுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.