சென்னை: தமிழ்நாட்டில் பிப்ரவரி 1ந்தேதி முதல் பள்ளிக்கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழகஅரசு அறிவித்துள்ள நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் வழியே செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

மேலும், தேர்வு இல்லாத நாட்களில் மாணவர்கள் கல்லூரிக்கு வர வேண்டும் என்றும், 1,3,5-வது செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனிலேயே நடைபெறும் என்று அறிவித்து உள்ளார்

தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று குறைந்து வருவதாலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளதாலும், கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன. அதைத்தொடர்ந்து கல்வி நிலையங்கள் திறக்கப்படும் என்றும், இரவு ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு, வழிபாட்டு தலங்களுக்கான தடைகள் இன்று முதல் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து விழுப்புரத்தில்  செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கல்லூரிகள் பிப்ரவரி 1-ல் திறந்தாலும், ஏற்கனவே அறிவித்தபடி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் தான் நடைபெறும். கல்லூரி மாணவர்களுக்கு 1,3,5-வது செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் தான் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். மேலும் , செய்முறை தேர்வுகளுக்காக மாணவர்கள் நலன் கருதி பிப்ரவரி 1-ல் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. ஆன்லைன் தேர்வு நடக்காத நாட்களில் மாணவர்கள் கல்லூரிகளுக்கு வரவேண்டும் என்றும் கூறினார்.