கன்னட திரையுலகில் பவர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட புனித் ராஜ்குமார் நடித்த கடைசி படம் ‘ஜேம்ஸ்’.
கடந்த அக்டோபர் மாதம் 29 ம் தேதி மாரடைப்பு காரணமாக புனித் ராஜ்குமார் திடீரென மரணமடைந்தது கன்னட திரையுலகினரை மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அப்பு என்று தனது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட புனித் ராஜ்குமார் மறைவுக்கு முன் ‘ஜேம்ஸ்’ திரைப்படத்தின் அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டது.
கிஷோர் பதிகொண்டா தயாரிப்பில் சேத்தன் பகதூர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தின் போஸ்டர் நாளை ஜனவரி 26 வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில், புனித் ராஜ்குமார் மறைவுக்குப் பின் அவரது முதல் பிறந்த நாளான மார்ச் 17 அன்று இந்த படம் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
மார்ச் 17 முதல் 23 வரை ஒரு வார காலத்திற்கு கர்நாடக முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளில் எந்த புதிய திரைப்படமும் ரிலீஸ் ஆகாது அதற்கு பதிலாக புனித் ராஜ்குமார் நடித்த ‘ஜேம்ஸ்’ படம் மட்டும் ‘சோலோ’ வாக அனைத்து திரையரங்குகளிலும் திரையிடப்படுகிறது.
இதற்கு கர்நாடகாவில் உள்ள அனைத்து நடிகர்கள், பிரபலங்கள் மற்றும் விநியோகிஸ்தர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ப்ரியா ஆனந்த், மேகா ஸ்ரீகாந்த், அனு பிரபாகர் முகர்ஜீ ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தில் புனித் ராஜ்குமாரின் மூத்த சகோதரர்கள் ராகவேந்திரா மற்றும் ஷிவ் ராஜ்குமார் ஆகியோர் கௌரவ வேடத்தில் தோன்றியிருக்கிறார்கள்.