இட்டாநகர்: இரண்டாம் உலகப்போரின் போது காணாமல் போன விமானம் 77 ஆண்டுகளுக்கு பிறகு மயமலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இரண்டாவது உலகப்போர் நடைபெற்ற கடந்த 1945 ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் அருணாச்சல பிரதேசத்தின் ஒரு மலைப் பகுதியில் புயல் காலநிலையில் C-46 போக்குவரத்து விமானம் காணாமல் போனபோது. இந்த விமானம் தெற்கு சீனாவின் குன்மிங்கிலிருந்து 13 பேரை ஏற்றிச் சென்றது. புறப்பட்ட சிறிது நேரத்தில் இந்த விமானம் மாயமானது. இதை தேடும் பணி நடைபெற்ற நலையில், அதை கண்டுபிடிக்க முடியவில்லை. மோசமான வானிலை காரணமாக இந்தியாவின் அருணாச்சல பிரதேச இமயமலை பகுதியில் விழுந்திருக்கலாம் என கருதப்பட்டது.
இந்த நிலையில், மாயமான விமானத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் அந்த விமானத்தில் பயணம் செய்த ஒருவரின் மகன் தற்போது இறங்கினார். நியூயார்க் நகரை சேர்ந்த பில் ஸ்கேர் என்ற அந்த நபர் , விமான தேடுதல் பணியை அமெரிக்க மலையேற்ற சாகச வீரர் கிளேட்டன் குக்லெஸ் இடம் ஒப்படைத்திருந்தார். அதன் அடிப்படையில் தனது குழுவினருடன் குக்லெஸ் இமயமலை பகுதியில் விமானம் குறித்த தேடுதல் வேட்டையில் தொடர்ந்து ஈடுபட்டுவந்தனர். இமயமலை உச்சியில் முகாமிட்டு தேடுதல் வேட்டை நடத்தினர்.
இந்த நிலையில், கடும் முயற்சிக்கு பின்னர் பனி மூடிய பகுதியில் கிடந்த போர் விமான பாகத்தை இந்த குழு கண்டுபிடித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.. பனி படர்ந்த பாறைகளுக்கு நடுவே விமான வால்பகுதியில் இருந்த குறியீட்டு எண்ணைக் கொண்டு அடையாளம் காண முடிந்தததாக கிளேட்டன் குக்லெஸ் தெரிவித்துள்ளார்.
விமானம் காணாமல் போய் 77 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது அது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், சிதைந்த நிலையில் காணப்படும் எஞ்சியிருந்த விமான பாகங்களில் மனிதர்கள் இருந்ததற்கான எந்த அடையாளங்களும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம், வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டில் இதே விமானத்தை தேடும் முயற்சியின் போது பனிப்புயலில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் எதையும் கண்டு பிடிக்க முடியாமல் திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.