சென்னை: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ந்தேதி தொடங்க உள்ள நிலையில், கொரோனா தொற்று காரணமாக, மக்களவை, மாநிலங்களவை செயல்படும் நேரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது பின்பற்றப்பட்ட நெறிமுறைகள் போலவே மீண்டும் ஷிப்டு முறையில் நாடாளுமன்ற அவைகள் செயல்பட உள்ளது.
2022-2023 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற ஜனவரி 31ஆம் தேதியிலிருந்து தொடங்குகிறது. அதன்படி, ஜனவரி 31ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 11 வரை முதல்கட்டமாகவும் மார்ச் 10 ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 8 ஆம் தேதி வரை இரண்டாம் கட்டமாகவும் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. ஜனவரி 31ந்தேதி கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். தொடர்ந்து பிப்ரவரி 1 ஆம் தேதி கூட்டத்தொடரில், 2022-2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய இருக்கிறார்.
ஆனால், தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக, இந்த முறை மீண்டும் ராஜ்யசபா மற்றும் லோக்சபாவின் பட்ஜெட் கூட்டத்தொடர்கள் வெவ்வேறு நேரங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பட்ஜெட் கூட்டத்தொடருக்கான மக்களவை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும். ராஜ்யசபா கூட்டத்தொடர் காலை 9 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோவிட்-19 வழிகாட்டுதல்கள் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஜனவரி 28ஆம் தேதி நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் லாலா லஜபதி ராயின் பிறந்தநாளான சிறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற பணியாளர்கள் 875 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும், ராஜ்யசபா தலைவர் எம் வெங்கையா நாயுடு மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோரும் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.