சென்னை: கொரோனா கட்டுப்பாடுகளை மீறி சென்னை காசிமேடு உள்பட மீன் விற்பனை செய்யப்படும் பல பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால்,  இதை காவல்துறையினரோ, சுகாதாரத்துறையினரோ கண்டுகொள்ளாத அவலம் நீடித்து வருகிறது.

கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக, இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளதுடன், வார இறுதிநாளான ஞாயிறு முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் மீன் போன்ற அசைவ உணவுகளை வாங்க மார்க்கெட்டுகளிலும், காசிமேடு, பட்டினம்பாக்கம் கடற்கரைகளிலும் கூடி வருகின்றனர். பலர் முக்கவசம் அணியாமல் நெருக்கியடித்துக்கொண்டு மீன்களை வாங்க போட்டிப்போடுவதால், தொற்று பரவல் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில்  காசிமேட்டில்  இன்று மீன் வாங்க  மக்கள் கூட்டம் அலை மோதின. மீன் வரத்து என்பது குறைவாக இருந்தபோதிலும் மீன்கள் விலை அதிகமாகவே காணப்பட்டது.   தொற்று பரவல் அதிகரிக்கும் சூழலில் தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றாமல், காசிமேடு மீன் சந்தையில் கட்டுக்கடங்காமல் கூடிய கூட்டத்தால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகள், ஹெல்மெட்டுன் முக்கவசம் அணிவதையும் வலியுறுத்தும் காவல்துறையினர், அவர்களை மறித்து முக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் வசூலிப்பதும், வணிக நிறுவனங்களில் சோதனை என்ற பெயரில் அவ்வப்போது அபராதங்களை வசூலித்தும் தொல்லை கொடுத்து வரும் நிலை யில், காசிமேடு போன்ற மக்கள் கூடும் இடங்களில், தொற்று பரவலை தடுக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததும், அங்கு முக்கவசம் அணியாமல் வருவோரிடம் அபராதம் வசூலிக்கவும் பயப்படுவது ஏனோ என்பது மர்மமாகவே உள்ளது.

தமிழக அரசின் இதுபோன்ற செயல்கள் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது.