டில்லி
டில்லியில் 50 ஆண்டுகளாக எரியும் அமர் ஜவான் ஜோதி அணைக்கப்பட்டு தேசிய போர் நினைவுச் சின்ன ஜோதியுடன் இணைக்கப்படுகிறது.
கடந்த 1971 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. அப்போது இந்தியா உதவியுடன் வங்கதேசம் உருவானது. அந்த போரில் மரணம் அடைந்த வீரர்களின் நினைவுக்காக டில்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் அமர் ஜவான் ஜோதி என்னும் தீச்சுடர் ஏற்றப்பட்டுத் தொடர்ந்து எரிந்து வருகிறது.
இந்த ஜோதி கடந்த 1972 ஆம் வருடம் ஜனவரி மாதம் 26 ஆம் தேதி அன்று அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் ஏற்றப்பட்டுத் தொடர்ந்து எரிந்து வருகிறது. இந்நிலையில் இன்று மாலையுடன் இந்த ஜோதி அணைக்கப்பட்டு தேசிய போர் நினைவுச் சின்னத்தில் உள்ள ஜோதியுடன் இணைக்கப்பட உள்ளதாக ராணுவ அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
தேசிய போர் நினைவுச் சின்னம் டில்லியில் கடந்த 2019 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இங்குப் போரில் மரணம் அடைந்த 25,942 வீரர்களின் பெயர்கள் தங்க எழுத்தில் கிரானைட் கற்களில் பொறிக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
வெகு நாட்களாக இருக்கும் ஒரு மாபெரும் வெற்றிச் சின்னத்தை முடக்குவதற்குப் பல ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பாஜக அரசு முந்தைய காங்கிரஸ் தலைவர்கள் தொடங்கிய பல இடங்களை இது போல் மூடுவதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.