டெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டனர். இதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் ஜாதி ரீதியிலான பதவி உயர்வு வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மதிப்பெண் அடிப்படையில்தான் பதவி உயர்வு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கி உள்ளது. இதுதமிழகத்தில் நிறைவேற்றப்படாமல் இருந்து வந்தது. இதையடுத்து, டிஎன்பிஎஸ்சி மீது நீதிமன்ற அவமதிப்பு வழங்கு தொடரப்பட்டது.

பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறையில் டிஎன்பிஎஸ்சி மதிப்பெண் அடிப்படையில், பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்தாத தமிழக அரசுக்கு, எதிரான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது,  டிஎன்பிஎஸ்சி சுதந்திரமான அமைப்பாக இருக்கும் போது, உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்துவதில் என்ன சிக்கல்? என்று காட்டமாக நீதிபதிகள் கேள்வி எழுப்யிதுடன், தமிழக அரசின் நடவடிக்கையை கடுமையாக கண்டித்தது. இதையடுத்து, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பது தமிழக அரசின் நோக்கம் அல்ல; கொரோனா காரணமாக தீர்ப்பை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது என்று விளக்கமளித்தது.

ஆனால் தமிழக அரசின் வாதத்தை ஏற்க மறுத்து, நீதிபதிகள், நீதிமன்ற தீர்ப்பை அலட்சியப்படுத்துவதை ஏற்க முடியாது என்று கடுமையாக சாடியது. இதையடுத்து, தமிழக அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக கூறியது.

அதைத்தொடர்ந்து, தமிழக அரசு உயரதிகாரிகள், இனி இதுபோன்ற நீதிமன்ற அவமதிப்பை செய்யக்கூடாது என்று கூறிய நீதிபதிகள், தமிழக அரசு அதிகாரிகளின் நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்று வழக்கை முடித்து வைப்பதாக அறிவித்தனர்.