சென்னை: சென்னையில் இன்று அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழையும், பல இடங்களில் மிதமான முறையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை பரவலாக மழை பெய்த நிலையில் இன்று கடலோர தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இன்று இரவு முதல் படிப்படியாக மழை குறைந்து விடும், அடுத்த ஒரு வாரம் பத்து நாட்களுக்கு வறண்ட வானிலை நீடிக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.