சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, மாநில தேர்தல் ஆணையர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதன் காரணமாக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு இன்று இரவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் கடந்த 2019ம் ஆண்டு இறுதியிலும், விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு கடந்த 2021ம் ஆண்டு தேர்தல் நடைபெற்று முடிந்து, தேர்தலில் வெற்றிபெற்றவர்கள், பதவியும் ஏற்றுக்கொண்டனர். ஆனால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் மாநில தேர்தல் ஆணையம் இழுத்தடித்து வருகிறது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியதுடன், 2022 ஜனவரிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு உள்ளது.
இதையடுத்து, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் கடந்த சில மாதங்களுக்கு முன்பே தொடங்கி விட்டது. அதுபோல அரசியல் கட்சிகளும், தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தங்களது கட்சி நிர்வாகிகளிடம் விருப்ப மனுக்களும் பெற்றுள்ளன. ஆனால், மாநில தேர்தல் ஆணையம் இதுவரை, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதிகளை அறிவிக்காமல் இழுத்தடித்து வருகிறது.
இந்த நிலையில், தேர்தல் தொடர்பாக, மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் இன்று மாலை அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன், காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். அதன்படி சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட 18 மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் பிற்பகல் 3.30 மணியளவிலும், திருவண்ணாமலை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மீதமுள்ள மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் மாலை 4. 30 மணியளவிலும் ஆலோசனை நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், வாக்குச்சாவடிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தயாராக வைத்தல், முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருப்பதை உறுதி செய்தல், உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும், தேர்தலை நடத்துவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட உள்ளது.
இதையடுத்து, இன்று மாலை, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரியில் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், இரு கட்டங்களை தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாகவும் தகல்கள் தெரிவிக்கின்றன.