டில்லி: இந்தியா – சீனா இடையே இன்று அதிகாரிகள் மட்டத்திலான 14வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தையில், பிரச்னைக்குரிய பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக் கொள்வது குறித்து ஆக்கப்பூர்வமான முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2020ம் ஆண்டு காஷ்மீர் மாநிலம் லடாக் எல்லைக்கோடு பகுதியில், இந்திய – சீன படைகளுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், இந்திய வீரர்கள் பலர் பலியாகினர். இரு தரப்பும் ஆயிரக்கணக்கான வீரர்கள் மற்றும் ஆயுதங்களை எல்லையில் குவித்தன. இதனால் போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீட்டித்து வருகிறது.
இதையடுத்து, படைகளிடையே அமைதியை ஏற்படுத்தும் வகையில் இரு தரப்பு ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதுவரை 13 சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. அதன் காரணமாக, வடக்கு மற்றும் தெற்கு பாங்காங் ஏரி மற்றும் கோக்ரா பகுதிகளில் இரு தரப்பும் படைகளை விலக்கின. ஆனாலும் கிழக்கு லடாக்கின் பல்வேறு பகுதிகளில் இருந்து சீனா படைகளை வாபஸ் பெற மறுத்து வருகிறது. இது தொடர்பாக கடந்த 13வது சுற்று பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படவில்லை.
இந்த நிலையில், இன்று 14வது சுற்று பேச்சு சீன எல்லைக்கு உட்பட்ட சுஸ்ஹுல் – மோல்டோ பகுதியில் நடக்கிறது. இந்த பேச்சுவார்த்தையில், இந்தியா சார்பாக, மூத்த ராணுவ தளபதி அந்தஸ்திலான அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். ‘இந்த பேச்சின் போது, ஹாட் ஸ்பிரிங்ஸ் உள்ளிட்ட பிரச்னைக்குரிய எல்லை பகுதியில் இரு தரப்பும் படைகளை விலக்கிக் கொள்வது உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான முடிவுகளை எட்ட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.