டில்லி

டைபெற உள்ள 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் குறித்த கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

விரைவில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ளன.   கொரோனா கட்டுப்பாடுகள் தற்போது அமலில் உள்ளதால் அதற்கேற்ப கட்சிகள் தேர்தல் பணியில் ஈடு பட்டு வருகின்றன.   இந்த மாநிலங்களில் ஏபிபி நியூஸ் மற்றும் சி வோட்டர் நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புக்கள் முடிவு வெளியாகி உள்ளன.

இதில் காணப்படுவதாவது :

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 403 இடங்களில் ஆளும் பாஜக 223 முதல் 235 இடங்களையும், சமாஜ்வாடி 145 முதல் 157 இடங்களையும், பகுஜன் சமாஜ் 8 முதல் 16 இடங்களையும், காங்கிரஸ் 3 முதல் 7 இடங்களையும், மற்றவை 4 முதல் 8 இடங்களையும் கைப்பற்றும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.  கடைசி நேரத் திருப்பம் ஏற்பட்டு, சமாஜ்வாடி கட்சி ஆட்சியைப் பிடிக்கவும் வாய்ப்புள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.   அதை மெய்யாக்குவது போல ஒரே நாளில் அமைச்சர் உட்பட சில சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவிலிருந்து விலகி இருப்பது யோகி அரசுக்கு அதிர்ச்சி தந்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 70 இடங்களில் ஆளும் பாஜக 31 முதல் 37 இடங்களையும், காங்கிரஸ் 30 முதல் 36 இடங்களையும், ஆம்ஆத்மி 2 முதல் 4 இடங்களையும், மற்றவை ஒரு இடத்தையும் கைப்பற்ற வாய்ப்புள்ளது. இங்கு பெரும்பான்மை பலத்தை பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் நெருங்கியுள்ளதால், பாஜக ஆட்சியைத் தக்க வைப்பது சந்தேகமாகி உள்ளது. மேலும் உத்தரகாண்ட்டில் 12 மூத்த அமைச்சர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என்பதால் இங்கு பாஜக வில் பூகம்பம் வெடிக்கும் வாய்ப்புள்ளது.

கோவாவில் பாஜகவில் உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. இதனால், கோவாவிலும் மீண்டும் பாஜக ஆட்சி என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் மொத்தமுள்ள 60 இடங்களில் ஆளும் பாஜக 23 முதல் 27 இடங்களையும், காங்கிரஸ் 22 முதல் 26 இடங்களையும், என்பிஎப் 2 முதல் 6 இடங்களையும், மற்றவை 5 முதல் 9 ஒன்பது இடங்களையும் கைப்பற்ற வாய்ப்புள்ளது. இங்கு எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பதில் இழுபறி ஏற்பட வாய்ப்புள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 117 இடங்களில் ஆளும் காங்கிரஸ் 37 முதல் 43 இடங்களையும், ஆம் ஆத்மி 52 முதல் 58 இடங்களையும், அகாலி தளம் 17 முதல் 23 இடங்களையும், பாஜக கூட்டணி 1 முதல் 3 இடங்களையும், பிற கட்சிகள் ஒரு இடத்தையும் கைப்பற்றும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.  எனவே காங்கிரஸ் அல்லது ஆம்ஆத்மியே ஆட்சி அமைக்கும், பாஜகவுக்கு படுதோல்வி எனக் கணிக்கப்பட்டுள்ளது.