சென்னை

சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்ய வந்த கொரோனா தடுப்பூசி போடாத 2177 பயணிகளை அனுமதிக்க மறுக்கப்பட்டுள்ளது.

ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   சென்னையில் நேற்று ஒரே நாளில் 6,190 பே பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதையொட்டி அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.   இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு அன்று முழுநேர ஊரடங்கு அமலாக்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் சென்னையில் புறநகர் ரயில்களில் பயணிக்க 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டது. தவிர பயணிகள் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டது.  வரும் 31 ஆம் தேதி வரை இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில்  2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் இல்லாமல் வந்த 2,177 பயணிகளுக்கு ரயிலில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  தவிர முகக் கவசம் அணியாத 31 நபர்களிடம் ரூ.15,500 அபராதம்  வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.