திருப்பாவை –27 ஆம் பாடல்
ஸ்ரீ ஆண்டாள் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தார். இந்த 30 நாட்களும் அவர் தன்னுடன் நோன்பு இருக்க தனது தோழிகளை அழைப்பது போல் பாடிய பாடல்கள் திருப்பாவை ஆகும்.
இன்று நாம் திருப்பாவை 27 ஆம் பாடலைக் காண்போம்
திருப்பாவை 27 :
கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்..
பொருள் :
எதிரிகளை வெற்றிகொள்ளும் சிறப்புமிக்க கோவிந்தனே!
உன்னை நாங்கள் பாடி அருள் பெற வந்தோம்.
அருட்செல்வத்துடன் இவ்வுலக வாழ்விற்கான பொருட்செல்வமும் தருவாயாக!
அது இருந்தால் தானே நாடு புகழ்கிறது.
கையில் அணியும் சூடகம், தோளில் அணியும் பாஹுவலயம், காதில் அணியும் தோடு, கர்ணப்பூ, காலில் அணியும் பாடகம் ஆகிய அணிகலன்களை எங்களுக்குக் கொடு.
புத்தாடைகளை வழங்கு.
பின்னர் விரதத்தை நிறைவு செய்யும் வகையில், கூட்டமாக உன்னுடன் அமர்ந்து கையில் நெய் வழிய பால்சோறு உண்போம்..