பெங்களூரு: மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், மேகதாது அணையை கட்டியே தீர வேண்டும் என வலியிறுத்தி கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை நடைபெற்று வருகிறது. மாநில காங்கிரஸ் தலைவர், டி.கே.சிவகுமார் தலைமையில் நடைபெறும் இந்த பாத யாத்திரையை முன்னாள் கர்நாடக முதல்வர் சித்தராமையா, ராஜ்யசபா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முரசடித்து தொடங்கி வைத்துள்ளனர்.
காவிரியின் குறுக்கே மேகதாது என்ற பகுதியில் கர்நாடக மாநில அரசு அணை கட்ட பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது. இதற்கு, தமிழ்நாடு அரசு கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறது. மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழகஅரசு அனுமதியில்லாமல், காவிரி விவகாரத்தில் கர்நாடக மாநில அரசு எந்தவொரு பணியும் மேற்கொள்ள இயலாது.
மேகதாது அணை தொடர்பாக இரு மாநிலங்களுக்கும் இடையே பிரச்னை நீடித்து வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் எதிர்கட்சியாக விளங்கும் காங்கிரஸ் கட்சி, பாஜக தலைமையிலான கர்நாடக அரசு விரைவில் மேகதாது அணை கட்ட வேண்டுமென வலியுறுத்தி மேகதாதுவில் இருந்து பெங்களூருவுக்கு 11 நாட்கள் பாதயாத்திரை தொடங்கியுள்ளது.
போரணிக்கு மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தலைமை வகித்து வருகிறார். , முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டு நடைபயணம் தொடங்கினர். இருப்பினும் சித்தராமையாவுக்கு உடல்நல பிரச்னைகள் ஏற்பட்டதால் அவர் பாதியில் கிளம்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் பாதயாத்திரையானது அரசியல் யாத்திரை எனவும் அரசியல் ஆதாயங்களுக்காக மக்களை ஏமாற்றும் வகையில் காங்கிரஸ் கட்சி பாதயாத்திரை மேற்கொண்டுள்ளதாகவும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறி டிகே சிவகுமார் பாதயாத்திரை மேற்கொள்வது கண்டிக்கத்தக்கது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டுக்கு எதிராக கர்நாடக காங்கிரஸ் கட்சி மேற்கொண்டு வரும் பாதயாத்திரை குறித்து, தமிழக அரசியல் கட்சிகள் இதுவரை வாய்திறக்கவில்லை. மாநில காங்கிரஸ் கட்சி மட்டுமின்றி, கூட்டணி கட்சியான, ஆளும் திமுகவும் இதுவரை எந்தவொரு பதிலும் தெரிவிக்காதது, விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே இதுதொடர்பாக விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ள நிலையில், கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி, தமிழகஅரசுக்கு எதிராக பாதயாத்திரையை தொடர்ந்து, இரு மாநில மக்களிடையே உள்ள நல்லிணக்கத்தை கெடுக்கும் செயல் என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது.