சென்னை
தமிழக அரசு ஒரு யூனிட் ஆற்று மணல் விலை ரூ. 1000 என நிர்ணயம் செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள ஆறுகளில் மணல் அள்ளி வியாபாரம் செய்ய மணல் சுரங்கங்களுக்கு ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டிருந்தது. கடந்த 2013-ம் ஆண்டு ஆற்று மணல் ஒரு யூனிட் விலை ரூ.300 முதல் 400 வரை நிர்ணயிக்கப்பட்டு தற்போது வரை விற்கப்பட்டு வருகிறது. அதில் முறைகேடுகள் எழுந்ததால் உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் படி பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை நீர்வள ஆதாரத்துறை விதித்துள்ளது.
கட்டுப்பாடுகள் விவரம் பின் வருமாறு :
தற்போது ஒரு யூனிட் ஆற்று மணலுக்கான விலை ரூ.1000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மணல் டிப்போக்களில் உள்ள சிறப்பு கவுண்டர்களில் மணல் வேண்டுவோர், பணம் செலுத்தலாம். மேலும் ஆற்று மணலுக்குப் பதிவு செய்யும்போது, அங்கீகரிக்கப்பட்ட கட்டிட அனுமதி தேவை ஆகும்.
24 மணி நேரமும் மணல் எடுக்கப்படும் மணல் சுரங்கங்களில் அனைத்து நிகழ்வுகளும் ரகசிய கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்படும். ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு மணல் தொடர்பான, அனைத்தும் கண்காணிக்கப்படும்.
ஆற்று மணலுக்குக் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அரசின் இ-சேவை மையங்கள் மூலம் பொதுமக்கள் பதிவு செய்து கொள்ளலாம். பிறகு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணிக்குள்ளாக லாரி உரிமையாளர்கள் முன்பதிவு செய்யலாம். இந்த முன்பதிவின் போது மணல் அள்ளிச்செல்லும் வாகனங்கள் தொடர்பான விவரங்களை ஒப்படைக்க வேண்டும்.
என அறிவிக்கப்பட்டுள்ளது.