சென்னை
தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் நாளை முதல் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது.
தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் ஒமிக்ரான் தொற்று இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் அதிகரித்து வருகிறது. இதனால் நாடெங்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த பாதிப்பு தமிழகத்திலும் அதிகமாக காணப்படுகிறது. இதனால் மூன்றாம் அலை கொரோனா பரவல் ஆரம்பித்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையொட்டி நாடெங்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணிகள் நாளை முதல் தொடங்க உள்ளது. இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வ வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ள 10.75 லட்சம் பேர் தகுதியானவர்கள் எனப் பட்டியல் இடப்பட்டுள்ளது. நாளை முதல் இவர்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.
ஏற்கனவே இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட சுகாதாரப் பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள், இணை நோய்ப் பாதிப்புடைய 60 வயதைத் தாண்டியோர் மற்றும் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தி 9 மாதங்களை தாண்டியோர் ஆகியோர் இந்த தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியானவர்கள் ஆவார்கள்
மேற்கூறிய தகுதி உள்ளவர்கள் எவ்வித சான்றும் இல்லாமல் ஆதார் அட்டையை பயன்படுத்தி நாளை முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். ஏற்கனவே 2 தடவைகளில் எந்த நிறுவனத்தின் தடுப்பூசி செலுத்தப்பட்டதோ அதே நிறுவனத்தின் பூஸ்டர் தடுப்பூசியைப் போட வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.