திரைத்துறையில் சிம்புவின் சிறப்பான பங்களிப்பை பாராட்டி அவருக்கு டாக்டர் பட்டம் வழங்குகிறது வேல்ஸ் பல்கலைக்கழகம்.

ஜனவரி 11 ம் தேதி நடைபெறும் விழாவில் அவருக்கு இந்த கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என்று பல்கலைக்கழக வேந்தரும் நிறுவனருமான ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.

பல்வேறு துறையில் சிறந்து செயலாற்றியவர்கள் பற்றிய விவரங்களை ஆய்வு செய்யும் குழுவின் பரிந்துரையின் பெயரிலேயே இந்த பட்டம் அவருக்கு வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

ஆறு மாத குழந்தையாக திரையில் அறிமுகமான சிம்பு தற்போது 39 வயதை எட்டி பிடித்திருக்கிறார், பாடலாசிரியர், பாடகர், இயக்குனர், நடிகர் என்று பல்வேறு பரிணாமங்களை கொண்ட சிம்புவுக்கு இந்த விருது வழங்கப்படுவதில் வேல்ஸ் பல்கலைக்கழகம் பெருமை கொள்வதாக அவர் கூறினார்.

சமீபத்தில் வெளியான மாநாடு படம் வெற்றியைத் தொடர்ந்து கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடிக்கிறார், இதனைத் தொடர்ந்து ‘கொரோனா குமார்’ என்ற படத்தில் சிம்பு ஒப்பந்தமாகி இருக்கிறார், இவ்விரு படங்களையும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.