சென்னை: 
முக கவசம் அணியாத பயணிகளுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வியாழக் கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகின்றன.  ஊரடங்கு நாளில் சென்னை புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க, 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  UTS செயலி மூலம் முன்பதிவு செய்யும் வசதி வரும் 10ஆம் தேதி  முதல் தற்காலிக நிறுத்தம் என்றும்,  பயணிகள் கொரோனா தடுப்பூசி சான்றிதழ், அடையாள அட்டைகளைக் காட்டினால் மட்டுமே பயணச்சீட்டு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முககவசம் அணியாத ரயில் பயணிகளுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய  கட்டுப்பாடுகள் வரும் 10-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.