சென்னை:  நீட் விலக்கு தொடர்பாக சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச்செயலகத்தில் தொடங்கியது. கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வானதி சீனிவாசன் வெளிநடப்பு செய்தார்.

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு இதுவரை ஆளுநர் அனுமதி வழங்காத நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க  பேரவையில் அங்கம் வகிக்கும் 13 கட்சிகளின் கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கூட்டினார்.

இந்த கூட்டத்தில்,  திமுக சார்பில் துரைமுருகன், அதிமுக சார்பில் விஜயபாஸ்கர், மனோஜ் பாண்டியன், காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை,  விசிக சார்பில் சிந்தனைச் செல்வன், பாஜக சார்பில் வானதி சீனிவாசன், பாமக சார்பில் ஜி.கே.மணி, மதிமுக சார்பில் சதன் திருமலைக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட் விலக்கு தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘நீட் தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவை குடியரசு தலைவருக்கு அனுப்புமாறு வலியுறுத்தினோம். ஆனால் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் ஆளுநர் வைத்துள்ளார், ‘ என்றார்.

மேலும், மாநில உரிமையும், சட்டமன்ற அதிகாரமும் கேள்விக்குறியாகி உள்ளதால், அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது என்றும்,  இது தொடர்பான தீர்மானத்துக்து அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், நீட் தேர்வு விவகாரத்தில் அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் அதிமுக துணை நிற்கும் என்றார். நீட் விலகு பெறும் வரை மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி மையங்களை அதிகரிக்க வேண்டும் என்றும், மாணவர்கள் தவறான எண்ணங்களுக்கு செல்வதை தவிர்க்க உளவியல் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நீர் விலக்கு தொடர்பான தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வானதி சீனிவாசன் அனைத்துக்கட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.   பேரவையில் இந்த மசோதா மீதான விவாத்தின்போது, பாஜகவின் கருத்தை முழுமையாக கேட்கவில்லை என்றும், மத்தியஅரசு, மாநில அரசு மீது நீட் தேர்வை திணித்துள்ளது என்று கூறுவது சரியல்ல,  நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் தீர்மானத்தில் பாஜகவுக்கு உடன்பாடு இல்லை என்று தெரிவித்த வானதி சீனிவாசன், அனைத்துக்கட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.