சென்னை

மிழகத்தில் நேற்று வெளியான இறுதி வாக்காளர் பட்டியலில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.  வரும்  ஜனவரி 31ஆம் தேதிக்குள் இந்த தேர்தலை நடத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பொங்கலையொட்டி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.   இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தற்போது தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு முதலே சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் ஜனவரி 1ஆம் தேதியை இலக்காகக் கொண்டு பணிகள் நடைபெற்று வந்தன. வாக்காளர் சேர்க்கை, திருத்தம் செய்துகொள்ள ஆங்காங்கே முகாம்கள் அமைக்கப்பட்டு அதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டன. டிசம்பர் மாதம் வாக்காளர் திருத்தப் பணிகள் வார இறுதி நாட்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு நடைபெற்று வந்தன.

நேற்று இறுதி வாக்காளர் பட்டியலைத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார்.  தேர்தல் ஆணைய இணைய தளத்தில் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வெளியீடும் வாக்காளர் இறுதிப் பட்டியலைப் பொதுமக்கள் காணலாம்.

இந்த இறுதி வாக்காளர் பட்டியல்களின்படி, செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட 27-சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 7:11,755 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்கள் 3,56,239 பேர் பெண்கள் 3,55,394 பேர் மூன்றாம் பாலினத்தவர் 122 பேர்.  அடுத்தபடியாக கோயம்புத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட 117-கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 4,76,467 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்கள் 2,37,305 பேர், பெண்கள் 2.39,021 பேர் மூன்றாம் பாலினத்தவர் 141 பேர்.

தமிழகத்தில் குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டத்திற்குட்பட்ட 164-கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி உள்ளது, இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,78,517 ஆவர். அதில் ஆண்கள் 86,893 ; பெண்கள் 91.613 ; மூன்றாம் பாலினத்தவர் 11 பேர் ஆவர் . இதற்கு அடுத்ததாக இரண்டாமிடத்தில் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட18-துறைமுகம் சட்டமன்றத் தொகுதி உள்ளது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,78,665 ஆவர். ஆண்கள் 92.978 பேர் பெண்கள் 85.626 பேர் மூன்றாம் பாலினத்தவர் 61 பேர்.

தற்போது வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த நடைமுறை தற்போது செயல்பாட்டில் உள்ளது. 01.01.2022 அன்று 18 வயது நிரம்பிய தகுதியுள்ள நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால், கீழ்க்கண்ட முறைகளில் விண்ணப்பித்து வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் படிவம் 6-ஐ சமர்ப்பிக்கலாம். அல்லது www.nvsp.in இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து “Voter Helpline App” செயலியைத் தரவிறக்கம் செய்து அதன்மூலம் விண்ணப்பிக்கலாம்.