டெல்லி: பஞ்சாபில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு கேள்விக்குறியானது தொடர்பாக, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை இன்று மோடி சந்தித்து பேசினார்.
பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நேற்று (புதன்கிழமை) விமானம் மூலம் பஞ்சாப் சென்றார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு செல்ல முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், மோசமான வானிலை காரணமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு காரில் செல்ல முடிவு செய்தார். ஆனால், அவரது வருகை குறித்து அறிந்த விவசாயிகள் சாலையை மறித்து போராட்டம் நடத்தியதால், பிரதமரின் வாகன அணிவகுப்பு சுமார் 20 நிமிடங்கள் வரை நின்றது. மாநில காங்கிரஸ் அரசு, போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் தனது பயணத்தை பிரதமர் மோடி ரத்து செய்ததாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநில அரசிடம் விளக்கமும் கேட்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி இன்று குடியரசுத் தலைவர் மாளிகை சென்று, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து விளக்கம் அளித்தார். அவரிடம், குடியரசுத் தலைவர் தனது கவலைகளைத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள டிவீட்டில், ராஷ்டிரபதி பவனில் பிரதமர் நரேந்திர மோடியை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சந்தித்தார். அப்போது பஞ்சாபில் நேற்று நடந்த பாதுகாப்பு கோளாறுகள் குறித்து குடியரசுத் தலைவரிடம், பிரதமர் எடுத்துரைத்தார். இந்த பாதுகாப்பு குளறுபடிகள் குறித்து குடியரசுத் தலைவர், பிரதமரிடம் தனது கவலையை தெரிவித்துக் கொண்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.