சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடக்கவிருந்த 3 நாள் அரசியல் பயிற்சி முகாம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரியில் ஜனவரி 7, 8, 9 ஆகிய மூன்று நாட்கள் அரசியல் பயிற்சி முகாம் எனது தலைமையில் நடைபெறுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இந்தப் பயிற்சி முகாமில் 76 மாவட்டத் தலைவர்கள் மற்றும் தேர்வு செய்யப் பட்ட 50 பயிற்சியாளர்கள் பங்கு பெறுவதற்கு திட்டமிடப்பட்டது.

இப்பயிற்சி முகாமில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் காங்கிரஸ் தலைவர்கள், அரசியல், பொருளாதார, இலக்கிய அறிஞர்கள் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றுவதற்கு 12 அமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஆனால், கொரோனா தொற்று திடீரென அதிகரித்து வருகிற நிலையில் தமிழக அரசு வருகிற ஜனவரி 9ஆம் தேதி முழு ஊரடங்கு கடைப்பிடிக்க வேண்டுமென அறிவித்திருக்கிறது. இதன் காரணமாகவும், கரோனா தொற்று பரவுகிற சூழலிலும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஏலகிரியில் ஜனவரி 7, 8, 9 ஆகிய நாட்களில் ஏற்பாடு செய்திருந்த அரசியல் பயிற்சி முகாம் ரத்து செய்யப்படுகிறது. அரசியல் பயிற்சி முகாமை வேறு ஒரு தேதியில் மீண்டும் நடத்துவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்’.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.