டில்லி

சென்ற ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாகப் பதியப்பட்ட புகார்களில் பாதிக்கும் மேல் பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளன.

தேசிய மகளிர் ஆணையம் நேற்று பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாகப் பதியப்பட்ட புகார்கள் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.   அந்த அறிக்கையில், “இதுவரை அதிகபட்சமாக 2014 ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து 33.096 புகார்கள் வந்தன.   கடந்த 2020 ஆம் அண்டு 23,722 புகார்கள் வந்துள்ளன.

கடந்த ஆண்டு அதாவது 2021 ஆம் ஆண்டு இது 30% அதிகரித்துள்ளது.  சென்ற ஆண்டு 30,864 புகார்கள் வந்துள்ளன.   இவற்றில் 11,013 புகார்கள் வாழ்வதற்கான உரிமை கோரல், 6,633 புகார்கள் குடும்ப வன்முறை, 4,589 புகார்கள் வரதட்சணை கொடுமை என வந்துள்ளன.  இவ்வாறு பதியப்பட்ட புகார்களில் 50%க்கும் அதிகமான புகார்கள் பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பதிவாகி உள்ளன.

கடந்த ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து மட்டும் 15,828 புகார்கள் வந்துள்ளன. அடுத்ததாக டெல்லியிலிருந்து 3,336 புகார்களும், மகாராஷ்டிராவிலிருந்து 1,504 புகார்களும், ஹரியானாவிலிருந்து 1460 புகார்களும், பிஹாரிலிருந்து 1456 புகார்களும் வந்துள்ளன.

தவிர பெண்களின் நடத்தைப் பற்றிய கிண்டல் தொடர்பா 1819 புகார்களும், பலாத்காரம், பலாத்கார முயற்சி தொடர்பாக 1,675 புகார்களும், காவல்துறையின் வன்முறை தொடர்பாக 1,537 புகார்களும், சைபர் குற்றம் தொடர்பாக 858 புகார்களும் வந்துள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.