சென்னை: கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் பெற்றவர்களில் 35 லட்சம் பேருக்கு தள்ளுபடி கிடையாது என்றும், கடந்த ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி பெற்றவர்களுக்கும் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது என்றும் தமிழகஅரசு அறிவித்து உள்ளது.
கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் பெற்ற 48,84,726 பேரில் 35,37,693 பேர் தள்ளுபடி பெற தகுதி அற்றவர்கள் என்றும், கடந்த ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது என்றும் கூட்டுறவுத்துறை பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திமுக தேர்தல் அறிக்கையில், விவசாயிகளின் பயிர்க்கடன், நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்றதும், சடைபெற்ற பட்ஜெட் மானிய சட்டமன்ற தொடரின்போது, தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி என்பது ஒரு குடும்பத்திற்கு 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன்களை சில தகுதியின் கீழ் உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது நகைக்கடன் தொடர்பாக அதிரடி அறிவிப்புகளை கூட்டுறவுத்துறை பதிவாளர் வெளியிட்டு உள்ளார். அதன்படி,
ஏற்கனவே 2021ம் ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும் இந்த நகைக்கடன் தள்ளுபடி என்பது செய்யப்படாது
நகைக்கடன் தள்ளுபடி கோரி விண்ணப்பித்த 48.84 லட்சம் பேரில், 35.37 லட்சம் பேர் தகுதியில்லாதவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
அத்துடன் நகைக்கடன் தள்ளுபடி பெறும் பயனாளிகளின் பட்டியலை இறுதி செய்ய அறிவுரைகள் வழங்கி கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. ( முன்னதாக கூட்டுறவு வங்கியில் 5 சவரன் நகைக்கு கீழ் உள்ள கடன்கள் தள்ளுபடி செய்யபடும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது)
நகைக்கடன் தொகையை முழுமையாக செலுத்தியவர்களுக்கும் இந்த தொகை திரும்ப வழங்கப்படாது என்ற ஒரு அறிவிப்பும் வெளியிடப்பட்டிருக்கிறது.
40 கிராமிற்கு மேல் நகைக்கடன் பெற்ற குடும்பத்தினர் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் இந்த நகைக்கடன் தள்ளுபடி என்பது செல்லுபடியாகாது.
எந்த ஒரு பொருளும் வேண்டாத குடும்ப அட்டை வைத்திருப்போர், குடும்ப அட்டை எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்களுக்கும் இந்த நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படாது
கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர், கூட்டுறவு சங்கங்களில் உள்ள நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர், அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்,
குடும்ப அட்டை எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்கள், ஆதார் எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்கள், ஒன்றோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட நகைக்கடன்கள் மூலம் மொத்த எடை 40 கிராமுக்கும் கூடுதலாக பெற்ற AAY குடும்ப அட்டைத்தாரர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது.
அரசாணையில் குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு தள்ளுபடிக்கு தகுதிப்பெறும் நகைக்கடன்தாரர்களின் மாவட்ட வாரியான பட்டியலும் அந்தந்த மண்டல இணைப்பதிவாளர்களுக்கு எக்செல் படிவத்தில் இ-மெயில் மூலம் இக்கடிதத்துடன் அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது