திருப்பாவை –14 ஆம் பாடல்
ஸ்ரீ ஆண்டாள் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தார். இந்த 30 நாட்களும் அவர் தன்னுடன் நோன்பு இருக்க தனது தோழிகளை அழைப்பது போல் பாடிய பாடல்கள் திருப்பாவை ஆகும்.
இன்று நாம் திருப்பாவை 14 ஆம் பாடலைக் காண்போம்
திருப்பாவை 14 :
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்
பொருள் :
உங்கள் வீட்டின் பின் வாசல் தோட்டத்தில்,பொழுது விடிந்ததின் அறிகுறியாக செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து விட்டன,ஆம்பல் மலர்கள் தங்கள் இதழ்களை மூடிவிட்டன.
செங்கல் பொடி நிறத்தைப் போன்ற காவி உடை அணிந்த,தூய்மையான துறவிகள் பலர் கோவில்களை நோக்கி, திருச்சங்கு முழக்கம் செய்ய சென்று கொண்டிருக்கின்றனர்.
எங்களை முன்னதாகவே வந்து எழுப்புவேன் என்று வீண் பெருமை பேசிய பெண்ணே !எழுந்திரு !
கொடுத்த வாக்கை மறந்ததற்காக வெட்கப் படாதவளே! பேச்சு மட்டும் இனிமையாகப் பேசுபவளே!
சங்கு சக்கரம் ஏந்திய விசாலமான கரங்களை உடையவனும், தாமரை போன்ற விரிந்த கண்களை உடையவனுமான கண்ணனின் புகழை அறிந்து,நெஞ்சில் நிறுத்தி பாடலாம் வா பெண்ணே !