திருப்பாவை –13 ஆம் பாடல்

ஸ்ரீ ஆண்டாள் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தார்.   இந்த 30 நாட்களும் அவர் தன்னுடன் நோன்பு இருக்க தனது தோழிகளை அழைப்பது போல் பாடிய பாடல்கள் திருப்பாவை ஆகும்.

இன்று நாம் திருப்பாவை 13 ஆம் பாடலைக் காண்போம்

திருப்பாவை 13 :

புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா வரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
பிள்ளைக ளெல்லாரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளி யெழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளுஞ் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளந் தவிர்ந்து கலந்தே லொரெம்பாவாய்

 

பொருள் :

பறவை உருவம் கொண்டு பகாசுரனின் வாயைப் பிளந்து அழிக்கவும்,கொடிய அரக்கனான ராவணனின் தலையைக் கொய்யவும் அவதாரம் எடுத்த நாராயணனின் புகழைப் பாடியபடி,நம் தோழிகள் அனைவரும் பாவை நோன்பு இருக்கும் இடத்திற்கு சென்று விட்டார்கள்.

கீழ்வானத்தில் சுக்கிரன் என்ற வெள்ளிக் கிரகம் உச்சிக்கு வந்து விட்டது,குரு என்ற வியாழ கிரகம் மறைந்து விட்டது!
பறவைகள் கீச்சிட்டு பாடுகின்றன!

விரிந்த மலர் போன்ற கண்ணில் கருவண்டு போல உன் கருமணி தெரிய,விழித்துக் கொண்டே அரைத் தூக்கம் தூங்குபவளே !

விடியலை உணர்த்தும் இந்த அறிகுறிகள் தெரிந்தும்,குளிர்ந்த நீரில் மூழ்கி குளிக்க வராமல் படுக்கையில் கிடந்து என்ன செய்கிறாய் பதுமை போன்ற பெண்ணே ?

கண்ணனை நினைக்கும் ஒவ்வொரு நாளும் நல்ல நாளே ! எனவே துாக்கம் என்கிற திருட்டை தவிர்த்து எங்களுடன் நீராட வா !