சென்னை
சென்னை நகரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதம் 14,15 மற்றும் 16 தேதிகளில் மூன்று நாட்கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தினைச் சார்ந்த பாரம்பரியக் கலைகளின் சிறப்பினை வெளிப்படுத்தும் வகையில், திரளான கலைஞர்கள் பங்கு பெறும் பிரம்மாண்ட கலைவிழா, பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புடன் ஆண்டுதோறும் சென்னையில் மூன்று நாட்கள் நடத்தப்படும். இதற்காகத் தொடரும் செலவினமாகக் கலை பண்பாட்டுத்துறையின் ஆண்டு வரவு செலவு ஒதுக்கீட்டிலிருந்து ரூ.91 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையொட்டி தமிழகத்தில் ‘நம்ம ஊரு திருவிழா’ என்னும் தலைப்பில் தமிழகத்தின் பாரம்பரியமான கிராமியக் கலைகளை வெளிப்படுத்தும் 500-க்கும் மேற்பட்ட கலைஞர்களைக் கொண்டு, சென்னையில் 7 இடங்களில் 14.01.2022, 15.01.2022, 16.01.2022 ஆகிய மூன்று நாட்கள் கலை விழா நடைபெறவுள்ளது.
மேலும் 7 வெளி மாநில கிராமியக் கலைக்குழுவானர் இவ்விழாவில் பங்குகொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் நடத்தப்பட உள்ளது போலவே மதுரை, திருச்சி, கோவை ஆகிய இடங்களிலும் நடத்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளைத் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.